அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு


அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Jan 2021 5:36 AM GMT (Updated: 18 Jan 2021 5:36 AM GMT)

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத் தின் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

திருப்பூர், 

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அ.தி.மு.க. திருப்பூர் மாநகர மாவட்டத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், சிவசாமி, திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.ஜி.ஆர். புகழ்

அதைத்தொடர்ந்து கட்சி கொடியை மாநகர் மாவட்ட செயலாளர் ஏற்றிவைத்தார். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் புகழ் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிராமங்கள் தோறும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுவது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளைகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல் வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளது. அதனால் ஓய்வு எடுக்காமல் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.

கட்சி அலுவலகம் திறப்பு விழா

வருகிற 20-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இருக்கிறதா? என்றும் விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு அமர்ஜோதி கார்டனில் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து பகுதியில் இருந்தும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் செல்வி முருகேசன், ஜான், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என். நடராஜ்,எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் அட்லஸ் லோகநாதன், இணைச்செயலாளர் உஷா ரவிக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், திருப்பூர் தெற்குமத்திய பகுதி செயலாளர்கண்ணப்பன், தென்னம்பாளையம் பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம், காந்தி நகர் பகுதி செயலாளர் கருணாகரன், வாலிபாளையம் பகுதி செயலாளர் சடையப்பன்,15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி. மணி, நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் தனபால், சதீஷ், நீதிராஜன், வக்கீல்கள் முருகேசன், பா.சு.மணிவண்ணன், மார்க்கெட் நா. சக்திவேல், காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story