சுற்றுலா தலங்கள் மூடல்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


சுற்றுலா தலங்கள் மூடல்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 18 Jan 2021 5:51 AM GMT (Updated: 18 Jan 2021 5:51 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க பொங்கல் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே புகழ்பெற்ற சுற்றுலா தலமான பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பின்பும் இந்த அரண்மனை தற்போது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு அரசர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்கள், அவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பொருட்கள், அருங்காட்சியங்கள் ேபான்றவை உள்ளன. மேலும் அரசர்கள் வாழ்ந்த உறைவிடங்கள், போர்தடவாளங்களை பாதுகாத்து வைத்திருந்த கூடங்கள், நாட்டிய அரங்குகள் போன்றவை மிகவும் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டிருக்கும்.

இவற்றை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக விடுமுறை, பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஏமாற்றம்

தற்போது பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையும் மூடப்பட்டது. இதனால் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் குடும்பத்துடன் அரண்மனையின் மூடப்பட்ட நுழைவு வாயில் முன்பு நின்பு புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றனர்.

Next Story