தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது


தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது
x
தினத்தந்தி 18 Jan 2021 5:54 AM GMT (Updated: 18 Jan 2021 5:54 AM GMT)

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.

நாகர்கோவில், 

குமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையிலேயே பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல மாவட்டம் முழுவதும், மலையோர பகுதிகளிலும் மழை காணப்பட்டது.

அணை நிலவரம்

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் நிலவரப்படி வினாடிக்கு 1,065 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 430 கனஅடியும், பொய்கை அணைக்கு 2 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கனஅடியும் தண்ணீர் வந்தது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 71.74 அடியாக இருந்தது. அது நேற்று 71.99 அடியாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணை 46.15 அடியாகவும், சிற்றார்1 -11.35 அடியாகவும், சிற்றார்2 -11.44 அடியாகவும் உள்ளது. இதே போல் பொய்கை 21.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு 24.44 அடியாகவும், முக்கடல் 18.10 அடியாகவும் உயர்ந்துள்ளது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 732 கனஅடியும், பெருஞ்சாணியில் 153 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று முன்தினம் 800 கனஅடி தண்ணீர் உபரிநீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. ஆனால் மழை குறைந்ததால் உபரிநீர் வெளியேற்றம் நேற்று நிறுத்தப்பட்டது.

Next Story