மணிமுத்தாறு அணை 4-வது ரீச் மூலம் திசையன்விளை, இட்டமொழி பகுதியில் வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


இட்டமொழி அருகே விஜய அச்சம்பாடு குளம் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
x
இட்டமொழி அருகே விஜய அச்சம்பாடு குளம் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 19 Jan 2021 2:46 AM IST (Updated: 19 Jan 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு அணை 4-வது ரீச் மூலம் திசையன்விளை, இட்டமொழி பகுதியில் உள்ள வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி, உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு முன்னுரிமை அடிப்படையில், மணிமுத்தாறு அணையின் 3, 4-வது ரீச்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்ததால், 1, 2-வது ரீச்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

3-வது ரீச் மூலமாக பாணான்குளம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள குளங்களுக்கும், 4-வது ரீச் மூலமாக விஜயநாராயணம், திசையன்விளை பகுதியில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

வறண்ட குளங்கள்
மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலமும், நம்பியாற்றின் விஜயங்கால் மூலமும் விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தததால், அந்த குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. அந்த தண்ணீர் பட்டஞ்சேரி குளத்துக்கு செல்வதால், அந்த குளத்தில் பாதி அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது.

ஆனால் அதற்கடுத்து உள்ள விஜய அச்சம்பாடு குளம், இட்டமொழி இலங்கையாடி குளம், சுப்பிரமணியபுரம் குளம், சுவிஷேசபுரம் குளம், அந்தோணியார்புரம் குளம், நல்லம்மாள்புரம் குளம், மகாதேவன்குளம், திசையன்விளை குளம், எருமைகுளம், ஆயன்குளம் படுகை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் பெரும்பாலும் வறண்டே கிடக்கிறது.

தண்ணீர் வழங்க கோரிக்கை
திசையன்விளை, இட்டமொழி பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால், அங்குள்ள அனைத்து குளங்களும் தண்ணீரின்றி மைதானமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்காமல் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம் ஆயன்குளம் படுகை வரையிலான குளங்கள் நிரம்பினால், தேரிப்பகுதியில் அமைந்துள்ள புத்தன்தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லும். மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கினால் இட்டமொழி, திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வளம் செழிக்கும்.

எனவே மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம், வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story