வடியாத மழைநீரால் மக்கள் அவதி: தூத்துக்குடியில் தனித்தனி தீவுகளாக மாறிய தெருக்கள்


தூத்துக்குடி ராம்நகரில் மழைநீர் குளம்போன்று தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
x
தூத்துக்குடி ராம்நகரில் மழைநீர் குளம்போன்று தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 18 Jan 2021 9:29 PM GMT (Updated: 18 Jan 2021 9:29 PM GMT)

தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் அனைத்து தெருக்களும் தனித்தனி தீவுகளாக மாறியதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும் பலத்த மழை கொட்டியதால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளும் தீவு போன்று காட்சி அளிப்பதால் தூத்துக்குடி மாநகரமே வெள்ளத்தில் மிதந்து தத்தளிக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரண முகாம்களில் தங்க ைவத்துள்ளனர். மேலும் அங்குள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக படகுகளில் சென்று வரும் துயரநிலை ஏற்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தேங்கிய வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களாக வெயில் அடித்த போதிலும், பல இடங்களில் இடுப்பளவுக்கும் அதிகமாக ெவள்ளம் சூழ்ந்துள்ளது.

தீவுகளாக மாறிய தெருக்கள்
தூத்துக்குடி ரகுமத்நகர், ராம்நகர், முத்தம்மாள்காலனி, லெவிஞ்சிபுரம், பிரையண்ட்நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குளம் போன்று காட்சி அளிக்கிறது. அனைத்து தெருக்களும் வெள்ளத்தால் சூழ்ந்ததால் பல்வேறு தீவுகளாக மாறி விட்டன. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மழைநீரில் தத்தளித்துதான் வெளியே செல்லும் அவல நிலை உள்ளது. சிலர் லாரி டியூப்களில் காற்று நிரப்பி படகாக பயன்படுத்தி ெசல்கின்றனர்.

மேலும் பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பிரையண்ட்நகர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தண்ணீரில் நடந்து செல்பவர்களின் கால்களில் புண் ஏற்பட்டு வருகிறது. நேதாஜி நகரில் தேங்கிய வெள்ளத்தில் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியது. இதனால் அந்த தண்ணீரை விரைந்து அகற்ற வேண்டும். அதேபோன்று தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

சாலைமறியல்
தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி, பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகின்றனர். நேற்று தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி, வி.எம்.எஸ்.நகர், சோட்டையன்தோப்பு ஆகிய பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

பாதாள சாக்கடை

இது குறித்து மாநகராட்சி மக்கள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை உள்ளது. லேசான மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. தூத்துக்குடி கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால் மழைநீரை பம்பிங் செய்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த திட்ட பணிகள் முடிவடைந்து இருந்தால், ஓரளவுக்கு தண்ணீரை பம்பிங் செய்து வெளியேற்றி இருக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் சி.வ.குளம் பலகோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு தண்ணீர் நிரம்பாமல் உள்ளது. ஆனால் ஊருக்குள் தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. இந்த தண்ணீரை சி.வ.குளத்துக்கு திருப்பி விடுவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

சிறிய குளம்
அதே போன்று கடந்த 2015-ம் ஆண்டு மழை வெள்ளம் வந்தபோது, பிரையண்ட்நகர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்றும் வகையில் பிரையண்ட்நகர் முதல் அண்ணாநகர் வழியாக பக்கிள் ஓடை வரை வடிகால் அமைக்கப்பட்டது. அந்த வடிகால் தற்போது மூடப்பட்டு கிடப்பதால் பிரையண்ட் நகருக்கு இன்னும் விடிவுகாலம் இல்லாமல் போய்விட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில், பூங்காக்களின் அருகே சிறிய குளம் போன்று தோண்டப்பட்டால், மழைநீர் அந்த குளத்தில் வந்து சேர வாய்ப்பாக அமையும். அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை 
வெளியேற்றினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதை தடுக்க முடியும். இதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story