விவசாயிகளின் கஷ்டத்தை போக்க சேதம் அடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை; தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியபோது
x
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியபோது
தினத்தந்தி 19 Jan 2021 3:45 AM IST (Updated: 19 Jan 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் கஷ்டத்தை போக்க சேதம் அடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

பயிர் சேதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏராளமான பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், மானாவாரி பயிர்கள் முளைத்தும் சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானவர்கள் சேதம் அடைந்த பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 

இதைத் தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், விவசாய சங்க நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு அழைத்தார். அங்கு அமர்ந்து இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.

இழப்பீடு

அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளோம். மழை பெய்யாமல் இருந்தால் ரூ.50 ஆயிரம் வரை மகசூல் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது அனைத்தும் அழிந்து விட்டது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளாத்திகுளம் தாலுகாவில் 90 சதவீதம் விவசாயிகள் குத்தகைக்கு நிலத்தை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயம் செய்த விவசாயிக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆகையால் இழப்பீடு வழங்கும் போது, நில உரிமையாளருக்கு வழங்காமல் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்த விவசாயிக்கு வழங்க வேண்டும். 2019-ம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. வில்லிசேரி பகுதியில் பயிர் சாகுபடி தொடங்கியது முதல் 3 முறை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். மேலும் ஒவ்வொரு பயிருக்கும் பயிர் சாகுபடிக்கு எவ்வளவு செலவாகிறது என்ற விவரம் அரசால் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மகசூல் பாதிப்பு
தொடர்ந்து கலெக்டர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. நானும் மானாவாரி விவசாயிதான். நான் பயிர் சேதங்களை பார்வையிட சென்றேன். அப்போது விவசாயிகள் கண்ணீர் விட்டனர். சேதமான பயிர்களை பார்த்து எனக்கும் அழுகை வந்து விட்டது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்ததால் பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்தன. 60 ஆயிரம் எக்டேர் உளுந்து, 20 ஆயிரம் எக்டேர் பாசிப்பயறு, 40 ஆயிரம் எக்டேர் மக்காச்சோளம் மற்றும் கம்பு, மிளகாய், வெங்காயம், பருத்தி, மல்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. 

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. அறுவடை செய்யப்பட்டு இருந்தால் நல்ல மகசூல் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது மழையால் அனைத்து பயிர்களும் சேதம் அடைந்து உள்ளன.

நெல் 30 முதல் 45 நாட்கள் பயிராக உள்ளது. இந்த வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருந்தால் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. 

மானாவாரியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சாகுபடி நடக்கிறது. அதன் வருமானத்தை கொண்டு ஆண்டு முழுவதும் விவசாயிகள் சாப்பிட்டு வருகின்றனர்.

குத்தகைதாரர்
பயிர் சேதம் தொடர்பாக கணக்கிடப்பட்டு உள்ளது. நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தால், குத்தகைதாரருக்கே இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளேன். ஆகையால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது. பயிர் காப்பீட்டு தொகை மட்டுமின்றி இழப்பீட்டு தொகையும் கிடைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

சதவீதம் அடிப்படையில் இல்லாமல், முழு இழப்பீட்டு தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2019-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.22 கோடி வரவேண்டி உள்ளது. அந்த தொகையை ஒரு வார காலத்துக்குள் பெற்று வழங்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேதம் காரணமாக யாரும் பொங்கல் கொண்டாடவில்லை. இந்த கஷ்டத்தை போக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நிவாரண உதவியை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் கி.செந்தில்ராஜ், கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கொண்டு இருந்த மற்ற விவசாயிகளையும் நேரில் சந்தித்து நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story