பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு: கோவையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை


கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த காட்சி.
x
கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த காட்சி.
தினத்தந்தி 19 Jan 2021 3:56 AM IST (Updated: 19 Jan 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சம்

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுவதை தொடர்ந்து பள்ளிகளில் நேற்று பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி களின் வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், நுழைவு வாயில், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தானியங்கி கிருமி நாசினி

கோவை ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள், ராஜவீதி துணிவணிகர் சங்க பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் தானியங்கி கிருமி நாசினி எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கைகளை நீட்டியதும் கிருமி நாசினியை அந்த எந்திரம் வழங்கும். இதை பயன்படுத்தி அவர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதேபோல் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வும் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரசின் உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 663 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகின்றன. இதையடுத்து இன்று (நேற்று) அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

கண்காணிப்பு குழு

மாணவ-மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சுற்ற அனுமதிக்கக்கூடாது, விளையாடுவதற்கோ அல்லது ஒருவர் பயன்படுத்தியா பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இதேபோல் மாணவ-மாணவிகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. இதனை கண்காணிக்க அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு முடிந்தவரை தனித்தனியாக வர வேண்டும். குழுவாக இணைந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக அதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மதிய உணவு, தண்ணீர் பாட்டில், ஸ்பூன் உள்ளிட்டவற்றை பிற மாணவர்களுடன் பகிரகூடாது. இரும்பும்போதும், தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி திறப்பை முன்னிட்டு கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். இதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.


Next Story