ஆடம்பரமாக வாழ ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாக மனைவி மீது போலீசில் தனியார் நிறுவன ஊழியர் புகார்
ஆடம்பரமாக வாழ ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாக மனைவி மீது போலீசில் தனியார் நிறுவன ஊழியர் புகார் அளித்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அமித். இவரது மனைவி இஷா. இந்த தம்பதிக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. அமித், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான புதிதில் அமித்தும், இஷாவும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால் சில மாதங்களிலேயே அமித்திடம் தன்னுடைய செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு இஷா தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் தங்க நகைகள் வாங்கி தரும்படி அமித்திடம், இஷா கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சமீபமாக அமித்திடம் தனக்கு ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்டு இஷா மிரட்டியதாக கூறப்படுகிறது. அவ்வாறு பணத்தை கொடுக்காவிட்டால் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி போலீசில் புகார் அளிக்க போவதாகவும் இஷா மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் தனக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறி அமித்திற்கு தொடர்ந்து இஷா தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அமித் நடந்த சம்பவங்கள் குறித்து பானசாவடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி இஷா மீது புகார் அளித்துள்ளார். அதில், திருமணமான சில மாதங்களில் இருந்தே ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக தன்னிடம் பணம், தங்க நகைகள் வாங்கி கொடுக்கும்படி கேட்டு இஷா சண்டை போடுகிறார். தற்போது ரூ.1 கோடி கேட்பதுடன், பணத்தை கொடுக்காவிட்டால், வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக புகார் அளிக்க உள்ளதாகவும் கூறுகிறார் என்று அமித் கூறி இருந்தார்.
இதையடுத்து, அமித் கொடுத்த புகாரின் பேரில் இஷா மீது பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் இஷாவுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்திருப்பதை மூடி மறைத்து தன்னை 3-வதாக திருமணம் செய்திருப்பதாகவும் அமித் குற்றச்சாட்டு கூறியுள்ளார். பொதுவாக திருமணத்திற்கு பின்பு மனைவியிடம் தான் வரதட்சணை கேட்டு கணவர் தொல்லை கொடுப்பது வழக்கம். ஆனால் பெங்களூருவில் வினோதமாக ஆடம்பரமாக வாழ கணவரிடம் பணம், நகைகள் கேட்டு மனைவி மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
Related Tags :
Next Story