இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடும் தலைவர் ஸ்டாலின்: இந்துக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் பா.ஜனதா செயல்படுகிறது: கனிமொழி எம்.பி.


நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை பார்த்து கனிமொழி எம்.பி. கையசைத்ததை படத்தில் காணலாம்.
x
நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை பார்த்து கனிமொழி எம்.பி. கையசைத்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 18 Jan 2021 11:42 PM GMT (Updated: 18 Jan 2021 11:42 PM GMT)

இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடும் தலைவர் ஸ்டாலின் என்றும், இந்துக்களில் ஒரு பிரிவினருக்காக மட்டும் பா.ஜனதா செயல் படுகிறது என்றும் நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

பொதுக்கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்“ என்ற தலைப்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ், பொருளாளர் கேட்சன், துணை செயலாளர்கள் முத்துசாமி, அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகே‌‌ஷ் வரவேற்று பேசினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள தமிழ் அடையாளங்களை, பெருமைகளை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கோடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவில்லை. தடை கொண்டு வந்தார்கள். அதற்காக மெரினாவில் நடந்த போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்றது.

தமிழகத்தில் 23 லட்சம் பேருக்கு வேலை இல்லை. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்தது. முதலீடுகளை கொண்டுவரக்கூடிய, ஈர்க்கக்கூடிய மாநிலங்களில் முதலிடத்தில் இருந்து தமிழகம் இன்று 14-வது இடத்தில் சரிந்து கிடக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டம்
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எடப்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுவும் முதல்-அமைச்சர் தொகுதியில் கலந்து கொண்டபோது, கிட்டத்தட்ட 9,760 பேர் வேலை வாங்கிதாருங்கள் என அந்த தொகுதி இளைஞர்கள் விண்ணப்பங்கள் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வேலை வாங்கித்தாருங்கள் என்று விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். இது என்ன வளர்ச்சி? உங்கள் தொகுதியைக்கூட உங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. தொகுதியில் உள்ளவர்களுக்கு வேலை அளிக்க முடியவில்லை.

தமிழக மக்கள் இனிமேல் ஏமாற தயாராக இல்லை. எல்லா விதத்திலும் தமிழகம் வீழச்்சியை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்கட்சியில் இருந்தாலும் ஆட்சியை வழிநடத்தக்கூடியவராக ஸ்டாலின் இருக்கிறார். அவரது அறிக்கையை பார்த்துதான் முதல்-அமைச்சர் எங்கு சென்றாலும் அடிக்கல் நாட்டுவார் அல்லது அறிவிப்பு செய்துவிட்டு சென்றுகொண்டே இருப்பார்.

கோப்புகள் கிடப்பில்...
தி.மு.க. ஆட்சியில் குமரிமாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான கோப்பை கிடப்பிலேயே போட்ட ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. 

முதல்-அமைச்சரிடம் கேட்டால் இங்கு புற்றுநோயே இல்லை என்கிறார். இங்குள்ள மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக கேரளா செல்லும் நிலை இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள்
குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை. குற்றவாளிகளை ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்கள். சுய உதவிக்குழுக்கள் நடத்தமுடியாத நிலை, மழையால் பயிர்கள் அழுகும் நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. விவசாயிகளின் அழுகுரலை கேட்க ஆட்சியில் இருப்பவர்கள் தயாராக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடகு வைக்கும் வகையில் மத்திய பா.ஜனதா விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களால் விவசாயிகளை மட்டும் அடகு வைக்கவில்லை. ரே‌‌ஷன் கடைகளில் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை கிடைக்காமல் செய்யும் வகையில் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப்பட்டியலில் இருந்து வெங்காயம், ராகி, உருளைகிழங்கு, பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துவிட்டார்கள். கியாஸ் விலை அதிகரித்ததை பற்றி கேட்க திராணி இல்லை. நீட் தேர்வை கொண்டுவந்து மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழை புறக்கணித்து இந்தி திணிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலத்திலும் இதுபோல் நடந்துள்ளது.

குமரி வஞ்சிக்கப்பட்டது
இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்துக்காக என்ன திட்டம் கொண்டு வந்துள்ளது. பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் தமிழகத்தில் உள்ள இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றார். நம்ம ஊரில் இருக்கும் கல்லூரிகளில், தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கிய கல்லூரிகளில் அவர்களுக்கு படிக்க இடம் இல்லாத நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யாது. நாங்கள்தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். 

பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இரண்டு சதவீதம் இருக்கும் மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கிறார்கள். இந்த ஒரு பிரிவினரின் கோரிக்கைக்காக மட்டும் பா.ஜனதா செயல்படுகிறது.

ஏமாற்ற முடியாது
பா.ஜனதா கட்சியினர் சொல்லலாம் நாங்கள்தான் இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று. அப்படி பாதுகாக்கக்கூடியவர்களாக இருந்தால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஏதாவது செய்திருக்கிறார்களா? ஒன்றும் இல்லை. அவர்கள் இந்துக்கள் இல்லையா? இருக்கக்கூடிய 2 சதவீதம் பேர்தான் இந்துக்களா? 

அவர்களை பாதுகாத்தால் எல்லா இந்துக்களையும் பாதுகாத்ததாக ஆகிவிடுமா? பெரும்பான்மையான இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க., கருணாநிதியை தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் தலைவர் ஸ்டாலின். அதனால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்காக தரவேண்டிய நியாயமான இட ஒதுக்கீட்டை கேட்டு போராடி வருகிறோம்.

அந்த பெரும்பான்மை இந்துக்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுகளை வாங்கி அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சதியை உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால்தான் நீங்கள் எந்த மதத்தின் பெயரைச் சொன்னாலும், எந்த பிரிவினைவாதத்தை கொண்டு வந்தாலும், எப்படி பிரித்துப்பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் நாங்கள் தமிழால், தமிழர்கள் என்பதில் ஒன்றுபட்டவர்களாக உள்ளோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது, ஏமாற்ற முடியாது என்பதை மதவாத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தை இந்த ஆட்சி வஞ்சித்தது போல வேறுயாரும் செய்திருக்கமாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்துகளை போல, சாலைகளை போல மோசமானதை யாரும் பார்க்க முடியாது. இந்த மாவட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வானைத்தொடும் வள்ளுவர் சிலை நிறுவியவர் கருணாநிதி. ஆட்சியில் இருப்பவர்கள் அதை பராமரிக்க நாம் போராட வேண்டி இருக்கிறது. 

பொய்கை அணை, மாம்பழத்துறையாறு அணை, கால்நடை ஆராய்ச்சி நிலையம், காமராஜருக்கு மணிமண்டபம், மார்‌‌ஷல் நேசமணி, ஜீவா ஆகியோருக்கு மணி மண்டபம். புத்தேரி மேம்பாலம், மணக்குடி பாலம் கொண்டுவந்தது கருணாநிதி ஆட்சியில்.

காமராஜர் கனவு
காமராஜரின் கனவை நிறைவேற்றியவர் கருணாநிதி. இந்த ஆட்சியில் மக்களின் வேதனைகள்தான் அதிகம். கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர், மாஸ்க், சாலை போடுவது, ஸ்மார்ட் சிட்டிகளில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என கணக்கிட்டவர்கள் இவர்கள். இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நாள் வந்துவிட்டது. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்காக உழைப்பவர் ஸ்டாலின். வருகிற தேர்தலில் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவோம்.

பெரும்பான்மையான இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின். தமிழகத்துக்கு எதிராக மத்திய பா.ஜனதா அரசு என்ன சட்டங்கள் கொண்டு வந்தாலும், திட்டங்கள் கொண்டு வந்தாலும் சிவப்பு கம்பளம் விரித்து அதை வரவேற்றுக் கொண்டிருக்கும் ஒரு முதுகெலும்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.

முன்னதாக அவருக்கு குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சந்திப்பில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் தலைமையில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் பெர்னார்டு, தில்லைச் செல்வம், லிவிங்ஸ்டன், தாமரைபாரதி, எப்.எம்.ராஜரெத்தினம், சற்குரு கண்ணன், வக்கீல் ஆனந்த், நெடுஞ்செழியன், சேக்தாவூது, அழகம்மாள்தாஸ், பெஞ்சமின், சிவராஜ், எம்.ஜே.ராஜன், உதயகுமார், சதாசிவன், சாகுல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயராணி நன்றி கூறினார்.

Next Story