நீர்நிலைகள் நிரம்பின: கடையக்குடி அணைக்கட்டில் மதகுகள் வழியாக பாய்ந்தோடும் தண்ணீர்


நீர்நிலைகள் நிரம்பின: கடையக்குடி அணைக்கட்டில் மதகுகள் வழியாக பாய்ந்தோடும் தண்ணீர்
x
தினத்தந்தி 19 Jan 2021 6:05 AM IST (Updated: 19 Jan 2021 6:05 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பின. கடையக்குடி அணைக்கட்டில் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2020) வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்தது. மேலும் நிவர், புரெவி புயலின் போது மழை அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் ஏரி, குளங்கள், கண்மாய்கள் பெருமளவு நிரம்பின. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவும் பெய்த மழையினால் நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டின.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், கிராமப்பகுதியில் உள்ள சிறு குளங்களும் நிரம்பின. புதுக்கோட்டை நகரப்பகுதியில் உள்ள பல்லவன் குளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் குண்டாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அரிமளம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெறும் மணற்பரப்பாக இருந்த இந்த ஆறுகளில் இரு புறமும் கரையை தொட்டப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனை பொதுமக்கள் ரசிப்பதோடு குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சிலர் மீன்களும் பிடித்து வருகின்றனர்.

கடையக்குடி அணைக்கட்டு

இதேபோல கடையக்குடி அணைக்கட்டில் தண்ணீர் முழு கொள்ளளவை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு நிரம்பியது. இதனால் நீரோட்டம் பாய்ந்தோடும் மதகுகள் சில திறந்து விடப்பட்டன. இதில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மேலும் மதகுகளின் இடைவெளி பகுதி வழியாகவும் தண்ணீர் செல்கிறது. கடல் போல காட்சியளிக்கும் இந்த அணைக்கட்டினை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வருகை தந்தப்படி உள்ளனர். மேலும் ஒரு சிலர் அணைக்கட்டில் பக்கவாட்டு வழியாக இறங்கி அதில் பாய்ந்தோடும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்.

மீன்கள் விற்பனை

அணைக்கட்டின் கரையோரம் சிலர் வலைகளை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்கள் பிடித்தனர். சிலர் அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கிச்சென்றனர். கடல் மீன்களைவிட இதுபோன்ற அணைக்கட்டில் பிடித்து விற்கப்படும் மீன்கள் நல்ல சுவையாக இருக்கும் என அதனை வாங்கி சென்றவர்கள் தெரிவித்தனர். மீன் பிடித்த கையோடு காசு கிடைத்ததை எண்ணி தொடர்ந்து மீன் பிடிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டினர்.

Next Story