திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணம்; தேர்தல் திருவிழாவாக அமைய வேண்டும்; பொள்ளாச்சி ஜெயராமன்
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணம் தேர்தல் திருவிழாவாக அமைய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆகியவை திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கேரிபாளையம் பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சி.சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள். கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொன்விழாவை நோக்கி...
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அது காளான் கட்சி என்றும், 100 நாட்களில் முடிந்து விடும் என்றும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கூறினார். ஆனால் 1½ கோடி தொண்டர்களுடன் 49-வது ஆண்டை கடந்து பொன்விழாவை நோக்கி அ.தி.மு.க. பயணிக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது பெருமைக்குரியது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்னர் விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து எளிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருகிறார்.
தேர்தல் திருவிழா
வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சுற்றுப்பயணம் தேர்தல் திருவிழாவாக அமைய வேண்டும்.
இதுவரை அவர் கண்டிராத வகையில் மக்கள் எழுச்சியுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சிக்காக உழைக்க வேண்டும்.
கட்சி அலுவலகம் திறப்பு
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். வரும் 20-ந்தேதி (நாளை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் பட்டியலில் அனைவரது பெயர்களும் உள்ளதா என்று பூத் முகவர்கள் சரிபார்க்க வேண்டும். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருப்பூர் காங்கேயம் ரோடு அமர்ஜோதி கார்டனில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைக்க உள்ள மாநகர் மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், மாநகர் மாவட்ட இணை செயலாளர் மணிமேகலை, பகுதி செயலாளர்கள் கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், சடையப்பன், திலகர்நகர் சுப்பு, கண்ணன், ஹரிஹரசுதன், வேலுமணி, மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், 15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி.மணி, அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், தண்ணீர்பந்தல் தனபால், கேபிள் விஜய் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜான் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story