மராட்டியத்தில் 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது யார்? ஆளும் கூட்டணியும், பா.ஜனதாவும் உரிமை கோருகிறது


மராட்டியத்தில் 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது யார்? ஆளும் கூட்டணியும், பா.ஜனதாவும் உரிமை கோருகிறது
x
தினத்தந்தி 19 Jan 2021 1:12 AM GMT (Updated: 19 Jan 2021 1:12 AM GMT)

மராட்டியத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் அதிக இடங்களில் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என ஆளும் கூட்டணியும், பா.ஜனதாவும் உரிமை கோருகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் சுமார் 28 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் பதவி காலம் முடிந்த 14 ஆயிரத்து 234 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மும்பை நகர், மும்பை புறநகர் மாவட்டங்களை தவிர இதர 34 மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. ஏற்கனவே பல பஞ்சாயத்துகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 12 ஆயிரத்து 711 கிராம பஞ்சாயத்துகளின் 1 லட்சத்து 25 ஆயிரத்து 709 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர்.

இது கிராம பஞ்சாயத்து தேர்தல் என்பதால் கட்சி சார்பில் போட்டியிட முடியாது. மேலும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னமும் ஒதுக்கப்படாது. எனவே தேர்தல் கமிஷன் ஒதுக்கிய சின்னத்தில் அவரவர் போட்டியிட்டனர். ஆனாலும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வாக்காளர்களிடம் அடையாளம் காட்டின. பெரும்பாலான இடங்களில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தங்களது கூட்டணி வேட்பாளர்களையே களமிறக்கி இருந்தது.

கடந்த 15-ந் தேதி நடந்த தேர்தலின் போது 79 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தானே மாவட்டத்திற்கு உள்பட 14 கிராமத்தினர் நவிமும்பை மாநகராட்சியில் தங்கள் கிராமங்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்து இருந்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக தெரியவந்தது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், எங்களது கூட்டணி 80 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டும் 4 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் எங்களது கூட்டணி அமோக வெற்றி பெற்று இருந்த நிலையில், கிராமப்புறங்களிலும் நாங்கள் பிரமாண்ட வெற்றியை கண்டு உள்ளோம். கிராமப்புற மக்கள் கூட்டணி அரசுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர் என்றார்.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று உள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர், என்றார்.

கட்சி சின்னம் கிடையாது என்பதால் கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரத்தை தேர்தல் கமிஷனால் வெளியிட முடியாத நிலையில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் தேர்தல் வெற்றியை உரிமைக்கோரி உள்ளன.

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசு வெடித்தும், வண்ண பொடிகளை தூவியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

சாங்கிலி மாவட்டத்தில் அதுல் பாட்டீல் என்ற வேட்பாளர் நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாடிய போது மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்றைய தேர்தல் முடிவின் போது அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story