ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்கு முன்பாக 2 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம்; அமைச்சர் சரோஜா பேச்சு


பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்ட போது; அமைச்சர் சரோஜா மற்றும் கட்சி நிர்வாகிகள்
x
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்ட போது; அமைச்சர் சரோஜா மற்றும் கட்சி நிர்வாகிகள்
தினத்தந்தி 19 Jan 2021 1:31 AM GMT (Updated: 19 Jan 2021 1:31 AM GMT)

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்கு முன்பாக 2 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார்.

பொதுக்கூட்டம்
திருப்பூர் மாநகர் மாவட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி.பி.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர் சிவசாமி, திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

சிறந்த திட்டம்
ஏழை, எளிய குழந்தைகள் வறுமை, பட்டினியை அறியாமல் இருக்கவும், எதிர்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக்கவும் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1982-ம் ஆண்டு ரூ.100 கோடியில் இந்த திட்டத்தை தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. இருப்பினும் அவர் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார். இன்று உலக அளவில் அந்த திட்டம் சிறந்த திட்டமாக விளங்கி வருகிறது.

தற்போது தமிழகத்தில் அங்கன்வாடி மூலமாக 17 லட்சம் குழந்தைகளும், சத்துணவு திட்டம் மூலமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 55 லட்சம் பேரும் பயன்பெறுகிறார்கள். அதுபோல் கிராம நிர்வாக அதிகாரி பணியிடத்தை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அங்கன்வாடி, சத்துணவு திட்டம் மூலமாக தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தாலிக்கு தங்கம் திட்டம்
எம்.ஜி.ஆர். வழியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை நடத்தினார். தனக்கு பின்னாலும் நூறாண்டு அ.தி.மு.க. ஆட்சி தொடரும், மக்களுக்கு நற்பணிகளை செய்யும் என்று அவர் கூறினார். அவர்கள் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். தாலிக்கு தங்கம் திட்டம் மகத்தான திட்டம். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதற்காக ரூ.1,030 கோடியை ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2019-20 மார்ச் மாதம் வரை விண்ணப்பித்து நிலுவையில் உள்ள பெண்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்கு முன்பாக அனைவருக்கும் தாலிக்கு தங்கம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெற இருக்கிறார்கள். இந்த திட்டத்தால் பெண்கள் உயர்கல்வி படிப்பது அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க. அரசின் சாதனைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா காலத்தில் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு அவர்கள் வீட்டுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஓட்டுகளை அ.தி.மு.க.வுக்கு போட வைத்தாலே சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவாகும்.

Next Story