மணப்பாறையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரி அரை நிர்வாண கோலத்தில் விவசாயிகள் சாலை மறியல்


மணப்பாறையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரி அரை நிர்வாண கோலத்தில் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2021 2:10 AM GMT (Updated: 19 Jan 2021 2:10 AM GMT)

மணப்பாறையில் சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகள் இழப்பீடு கேட்டு அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை, 

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள கிராம மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். ஆனால் சமீபகாலமாக பொய்த்து போன பருவமழையால் நீர்நிலைகள், நிலத்தடி நீர் வறண்டு போய் விவசாயிகள் பலரும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பகுதியில் விவசாயத்தை தொடங்கினர்.

நெல், எள், கொள், உளுந்து என பலவகையான பயிர்களை தங்களின் விளைநிலத்திற்கு ஏற்ப பயிரிட்டிருந்தனர். விளைச்சலும் அமோகமாகவே இருந்தது. ஆனால் அதை அறுவடை செய்வதற்குள் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து வகையான பயிர்களும் மழைநீரில் மூழ்கி அழுகின. சில இடங்களில் விழுந்த நெற்கதிர்கள் முளைக்கத்தொடங்கி விட்டன.

முற்றுகை போராட்டம்

இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயம் செய்த விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் இழப்பீடு உடனே வழங்கப்படாததால், ஏராளமான விவசாயிகள் நேற்று காலை மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது, அழுகிய, முளைத்த பயிர்களை கண்ணீருடன் அதிகாரிகளிடம் காட்டி இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

அரை நிர்வாண போராட்டம்

பின்னர் வேளாண்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் அரசு அறிவிப்பின் படி இழப்பீடு வழங்க வழி வகை செய்யப்படும் என்று கூறினர். இதே போல் தாசில்தார் லெஜபதிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர், மணப்பாறை இன்ஸ்பெக்டர் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் தங்களின் சட்டையை கழற்றி விட்டு அரை நிர்வாணத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடும், பயிர் காப்பீட்டு தொகையும் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்று சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்ற அழைத்துச்சென்ற போது, அவர்கள் போலீஸ் வேன் முன்னே படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதற்கிடையில் இன்று திருச்சியில் கலெக்டரிடம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று முறையிட உள்ளோம். ஆனால் எதற்கும் தீர்வு இல்லை என்றால் புதன்கிழமை மணப்பாறையில் நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறி உள்ளார். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story