அரசு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் பேட்டி


அரசு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2021 7:44 AM IST (Updated: 19 Jan 2021 7:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருச்சி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. 9 மாதங்களுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, 4 சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. அனைத்து பள்ளிகளிலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளார்களா? என்பது குறித்து திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள கேம்பியன் பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும், பள்ளிகள் கண்காணிப்பு அதிகாரியுமான நிர்மல்ராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஆகியோர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வைட்டமின் மாத்திரைகள்

திருச்சி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 3 பள்ளிகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு எந்த குறைபாடும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 503 உள்ளன. இதில் 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் மூலமாக ஆசிரியர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக பள்ளிகளில் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக வரும் சீசன் காய்ச்சல்களால் மாணவர்களிடையே அச்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர் சோதனை நடத்த கூறி இருக்கிறோம்.

அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காத பள்ளிகள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இப்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும் இயங்குவதால் ஒரு பள்ளியில் 6-ல் ஒரு மடங்கு மாணவர்கள் தான் பள்ளிக்கு வருவார்கள். இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான அளவு வகுப்பறைகள் இருக்கும்.

வருகைப் பதிவு

விருப்பப்படும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் தான் வரவேண்டும். வருகை பதிவேடு என்பது கட்டாயம் கிடையாது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கியதைப்போல் 11-ம் வகுப்புக்கும் பள்ளி தொடங்குமா? என்பதை தமிழக முதல்-அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தான் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் கல்வி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

20 வகையான விதிமுறைகள்

இதற்கிடையே அரசு விதிமுறைகள் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில், முககவசம், கிருமி நாசினி தெளித்தல் என்பன உள்ளிட்ட 20 வகையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்த படிவம் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதையும் குறிப்பு எடுத்து பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தனர்.

Next Story