கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை
கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருவாரூர் கலெக்டர் சாந்தா கூறினார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளன.
கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நன்னிலம் அருகே பனங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களின் பாதுகாப்பு
மாணவர்களின் எதிர்கால நலனை கருதி, முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (இன்று) முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வகுப்பறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும்.
உடல் வெப்ப நிலை
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். மாணவர்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின்போது திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், முதன்மை கல்வி அலுவலர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story