குத்தகை நிலத்தில் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் பெற அடங்கல் சான்று வழங்க வேண்டும்
குத்தகை நிலத்தில் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் பெற அடங்கல் சான்று வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் வந்த குத்தகை விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாச்சூர், ஆதனக்கோட்டை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்றுகாலை வந்தனர். பின்னர் அவர்கள், ஆழ்துளை கிணற்றுப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், கும்பகோணம் பகுதியில் கோவில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கும், நிவாரணம் பெறவும் அடங்கல் சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அப்பகுதி விவசாயிகள் அடங்கல் சான்று பெற்று பதிவு செய்து வருவதாக தெரிகிறது. அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100 விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகிறோம். பயிர்க் காப்பீடு மற்றும் நிவாரணம் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுகிய போது உத்தரவு வரவில்லை என சொல்கிறார்.
அடங்கல் சான்று
எங்கள் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைத்துவிட்டது. அரசு அறிவித்த நிவாரணம் பெற சான்று அவசியம் தேவை. நாங்கள் குத்தகை பணம் செலுத்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அடங்கல் சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிலக்கடலை
தஞ்சையை அடுத்த புதுப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, ஆரமுண்டான்பட்டி, கோற்றவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அழுகிய நிலக்கடலை செடிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 150 ஏக்கரில் நிலக்கடலை அழுகி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, விடுபடாமல் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story