தேனி மாவட்டத்தில் 218 பள்ளிகள் இன்று திறப்பு வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிப்பு
தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக 218 பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தேனி,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 71 உயர்நிலைப்பள்ளிகள், 147 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகள் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
33 ஆயிரம் மாணவர்கள்
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அருள்முருகன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 18 ஆயிரத்து 85 மாணவ-மாணவிகள், பிளஸ்-2 வகுப்பில் 14 ஆயிரத்து 905 மாணவ-மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 990 பேர் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வந்து செல்வதற்கும், பள்ளிகளில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு வகுப்பறைக்கு 25 பேர் வீதம் பிரித்து அமர வைக்கப்படுவார்கள். அன்றாடம் பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பறையில் கிருமி நாசினி தெளிக்கவும், மாணவ-மாணவிகள் முககவசம் அணிவது மற்றும் சானிடைசர் பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு குழுக்கள்
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? அரசு விதித்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க 3 கல்வி மாவட்ட அலுவலர்கள், 14 வட்டார கல்வி அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story