மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: அழுகிய பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் விவசாயிகள் மழையால் நீரில் மூழ்கி அழுகிய நெல், மிளகாய், சோளம் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நிவாரணம் வழங்ககோரி மனு அளித்தனர்.
முதுகுளத்தூர் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 100 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் வளநாடு கண்மாயில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெருவெள்ளம் ஏற்பட்டபோது கண்மாய் நிறைந்து விவசாய நிலங்களை அழித்துவிட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரில்ஆய்வு செய்து மேடான பகுதியில் உயரமாக உள்ள மதகிற்கு மாற்றாக உயரம் குறைந்த மதகு அமைத்து கொடுத்தனர். இத்தனை ஆண்டுகாலம் வெள்ள பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது இந்த மதகில் சிலர் மணல் மூடைகள் மற்றும் பலகைகள் வைத்து மீண்டும் உயர்த்திவிட்டனர். இதனால் தண்ணீர் வெளியில் செல்ல முடியாமல் எங்கள் விவசாய நிலங்களை அழித்துவிட்டது. பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்துவிட்டது. மதகினை பழைய நிலைக்கு குறைத்து அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கூடலூர் மற்றும் கருங்குடி குருப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் திரளாக வந்து அளித்த மனுவில், மாவட்டத்தில் பெய்த கனமழையால் நெல், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அழுகி விட்டன. எனவே, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், மிளகாய் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரமும், பணப்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்று ரூ.75 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறைதீர் கூட்டத்தின்போது விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story