கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் - முழுமையான நிவாரணம் வழங்க கோரிக்கை


கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் - முழுமையான நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2021 11:02 PM IST (Updated: 19 Jan 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் வந்து மனு அளித்தனர். அப்போது முழுமையான நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

கடலூர்,

கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் நேற்று தொடர் மழையால் அழுகிய நெற்பயிர்களையும், அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே முளைத்து விட்ட பயிர்களையும் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையால் எடையார், பிள்ளையார் தாங்கல், வவ்வால் தோப்பு, கூத்தூர், நடுத்திட்டு, திருநாரையூர் போன்ற பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து விட்டன. சில இடங்களில் அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே பயிர்கள் முளைத்து விட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் ரூ.4 ஆயிரம் வரை தான் வழங்கி வருகின்றனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வேளாண்மை துறை அதிகாரிகள் வந்து, விவசாயிகளை சந்தித்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்.

Next Story