காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள்
x
தினத்தந்தி 19 Jan 2021 9:00 PM GMT (Updated: 19 Jan 2021 6:53 PM GMT)

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்வத்துடன் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆர்வத்துடன் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.

ஆர்வத்துடன் சென்றனர்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவ- மாணவிகளுக்கு வெப்ப மாதிரி பரிசோதனை, முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வீட்டில் இருந்து ஆன்-லைன் வகுப்பு படிப்பதை விட பள்ளிக்கு வந்து படிப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. எதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 10 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்துள்ளது மிகவும் மிகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

பெரிய காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 97 உயர்நிலைப்பள்ளிகள், 137 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 234 பள்ளிகள் உள்ளன. கொரோனா தொற்று விடுப்புக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஒரு வகுப்பறையில் 25 மாணவ-மாணவிகள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறியும் வண்ணம் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பதாகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story