ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் 316 காளைகள் சீறிப்பாய்ந்தன - மாடுகள் முட்டியதில் 26 பேர் காயம்
ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை அருகே கல்நார்சாம்பட்டி பகுதியில் நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 316 காளைகள் பங்கேற்றன. டாக்டர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைக்கு பின் காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
காளைகள் ஓடும் வீதியில் இரு பக்கமும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தன. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்க முயன்ற 26 பேர் மாடுகள் முட்டி காயமடைந்தனர். அவர்களுக்கு ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் அதன் உரிமையாளர் முருகன் என்பவரிடம் வழங்கப்பட்டது. 2-வது பரிசு பெற்ற வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த காளைக்கு அதன் உரிமையாளர் வழக்கறிஞர் பாபுவிடம் ரூ. 40 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற அனேரி பகுதியை சேர்ந்த காளைக்கு, அதன் உரிமையாளர் பிரியங்காவிடம் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல் வேகமாக ஓடிய 25 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாட்டறம்பள்ளி தாசில்தார் சுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story