சமயபுரத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த நர்சிங் மாணவி சாவு - காரணம் என்ன? போலீசார் விசாரணை


சமயபுரத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த நர்சிங் மாணவி சாவு - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2021 6:59 PM IST (Updated: 20 Jan 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த நர்சிங் மாணவி நேற்று உயிரிழந்தார்.

சமயபுரம்,

அரியலூர் மாவட்டம் பொய்யுரை சேர்ந்தவர் ராமு (என்கிற) ராமையன் விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 19). இவர் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவி ராஜேஸ்வரி வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு ஊரிலிருந்து கல்லூரிக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளுடன் அவர் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

இந்தநிலையில் காலையில் சக மாணவிகள் எழுந்து பார்த்த போது, ராஜேஸ்வரி அறையில் இல்லை. உடனே மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் பலத்த காயங்களுடன் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் சமயபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். திருச்சி சரக ஐ.ஜி. ஜெயராமன், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, திருச்சி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி ராஜேஸ்வரி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story