லாலாபேட்டை பகுதியில் எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை


லாலாபேட்டை பகுதியில் எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Jan 2021 7:35 PM IST (Updated: 20 Jan 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை பகுதியில் எந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிபட்டி, சிந்தலவாடி, மேட்டு மகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். அந்த வயல்களில் நெல் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு நெல்லை அறுவடை செய்ய விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

தற்போது அறுவடை பணிக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெல்வயல்களுக்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு விரைவாக நெல் அறுவடை செய்யப்படுகின்றன.

எந்திரம் மூலம் ஒரு ஏக்கருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம் செலவில் அறுவடை செய்யப்பட்டு நெல் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் பிரித்து கொடுக்கப்பட்டு விடுகிறது.

தற்போது மேற்கண்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் பல்வேறு வயல்களில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கதிர் அடிக்கும் எந்திரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள தெரிவிக்கின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து எந்திரங்கள் கேட்கப்பட்டு உள்ள நிலையில் இன்று வருமா?, நாளை வருமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாவும், அதுவரை மழை வந்து விடக்கூடாது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

எந்திர பற்றாக்குறையால் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாததால் நெல்மணிகள் உதிர்ந்து வருவதாகவும், அரசு அதிகாரிகளும் இதுவிஷயத்தில் கவனம் செலுத்தி எந்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story