காரைக்குடியில், சாலையில் படுத்து உருண்டு தி.மு.க.வினர் போராட்டம் - பாதாள சாக்கடை பணியால் சேதமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
காரைக்குடியில் சாலையில் படுத்து தி.மு.க.வினர் உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதாள சாக்கடை பணியால் சேதமான சாலையை சீரமைக்க வலியுறுத்தினார்கள்.
காரைக்குடி,
காரைக்குடி நகரின் வளர்ச்சிக்காக பாதாள சாக்கடை திட்ட பணிகள் சுமார் ரூ.125 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலைகளில் குழாய்கள் பதிப்பதற்காக ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் பெரும்பாலான இடங்களில் புதிதாக தார்ச்சாலை போடவில்ைல. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
காரைக்குடி நகரை பொறுத்தவரை காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து அண்ணாசிலை வரையிலும், கொப்புடையம்மன் கோவில் பகுதியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா பகுதி வரையிலும், அண்ணாசிலையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும், கணேசபுரம், வைத்திலிங்கபுரம், சந்தைபேட்டை, வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பணிகள் நிறைவு பெற்று விடடது. இருப்பினும் அந்த பகுதியில் புதிய தார்ச்சாலை இதுவரை போடப்படவில்லை. புதிதாக தார்ச்சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சார்பில் தினந்தோறும் சாலை மறியல் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், சாலையில் நாற்று நடும் போராட்டம் உள்ளிட்டவைகள் நடத்தப்படுகின்றன.
இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கக்கோரி பொதுமக்கள் தரப்பில் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினால் சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்த போவதாக தி.மு.க.வினர் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் திரண்ட தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஐந்து விளக்கு பகுதியில் இருந்து அண்ணாசிலை வரை நீண்ட வரிசையில் நின்று புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலையில் தி.மு.க.வினர் படுத்து உருண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனே அந்த வழியாக வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் மாற்று வழியில் திருப்பி அனுப்பினர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் முத்துதுரை, காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞரணி பரணி கிட்டு மற்றும் மகளிரணி அமைப்பினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து தி.மு.க.வினர் அண்ணாசிலை பகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story