நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மைக்கு மாறான தகவல்களை மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மைக்கு மாறான தகவல்களை மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2021 8:03 PM IST (Updated: 20 Jan 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மைக்கு மாறான தகவல்களை மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன். ஒன்றிய செயலாளர்கள் நிலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பெரியண்ணன், வேலுமணி, செந்தில்குமார், செல்வராஜ், மதிவாணன், மகாலிங்கம், விஸ்வநாதன், சேகர், பசுபதி, கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தூள் செட்டி ஏரி பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒரு கூட்டத்தை கூட்டி, நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே என்னேகொல்புதூரில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நிலம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இதுவரை நிலம் வழங்க ஒப்புதல் வழங்கவில்லை. இருப்பினும் இதுகுறித்து முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடன் அவர் நீர்ப்பாசன திட்டங்களுக்கு கால்வாய் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசாணை பிறப்பித்து தற்போது அந்த நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

எனவே அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

இதேபோன்று தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது 931 சிறு கிராமங்கள் இணைக்கப்பட்டு அந்த பகுதிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தலைமை கழக பேச்சாளர்கள் குப்பண்ணா விவேகானந்தன், சிங்கை அம்புஜம், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் குருநாதன், பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சீன் அருள்சாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அணில் பிரகாஷ் நன்றி கூறினார்.

Next Story