10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நேற்று முதல் பள்ளிகளை திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, நகராட்சி, உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. என 400 பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 33 ஆயிரத்து 194 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 26 ஆயிரத்து 571 மாணவிகளும் என மொத்தம் 59 ஆயிரத்து 765 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதுபோல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் மற்றும் உடல்நலம் குறித்து கடிதம் கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகர பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடல்நலம் குறித்த கடிதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு செய்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து அதன் பின்னர் பள்ளிக்குள் அனுமதித்தனர். அதுபோல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.
சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். ஏற்கனவே வழங்கப்பட்ட பஸ் பாசை கொண்டு மாணவ- மாணவிகள் அரசு பஸ்களில் பயணம் செய்தனர். பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் 676 பேரும், 12-ம் வகுப்பில் 1,335 பேரும் படிக்கிறார்கள். வகுப்பறை வசதியை கருத்தில் கொண்டு மாணவிகளை பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் வகையில் சுழற்சி அடிப்படையில் வரவழைக்கப்பட்டனர். 70 சதவீதம் மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்து இருந்தனர்.
2 நாட்களுக்கு எவ்வாறு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிந்து வருதல், வகுப்பறையில் மாணவர்கள் தொட்டு பேசாமல் இருப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். அதன்பிறகே பாடத்திட்டங்கள் தொடங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதுபோல் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் உணவு சாப்பிடுவதை கண்காணிக்க ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. அதுபோல் மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் வைட்டமின் மாத்திரைகள் 10 எண்ணிக்கையில் வழங்கப்பட்டு மதிய உணவு உண்ட பிறகு அரை மணி நேரம் கழித்து மாத்திரை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவித்தனர்.பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை (கள்ளர் சீரமைப்பு பள்ளி) இணை இயக்குனர் செல்வராஜ் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் உடன் இருந்தார்.
அதுபோல் திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நரேந்திரன் திருப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 60 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55 சதவீதத்துக்கும் மேலாக மாணவிகள் வந்திருந்தனர்.
வருகை தராத மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்து ஒப்புதலுடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் தங்களது தோழிகள், நண்பர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு செல்வதற்கு முன்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பின்பற்ற வேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை? போன்றவை அடங்கிய துண்டு பிரசுரங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில கலை நிகழ்ச்சிகள், ஊக்கப்படுத்தும் பேச்சுகள் ஆகியவையும் நடத்தப்பட்டன. மேலும் பொதுத் தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்வது, தேர்வுக்கு தயாராகுவது எப்படி? போன்ற ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, பெரும்பாலான பள்ளிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டதும் ஆசிரியர்கள் இதுபோன்ற ஆலோசனைகளையே வழங்கினர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பிற்கு 50 சதவீத மாணவர்களும், பிளஸ்-2 வகுப்புக்கு 60 சதவீத மாணவர்களும் வந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story