அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்பு: விழாக்கோலம் பூண்ட கமலா ஹாரிசின் பூர்வீக கிராமம்


அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்பு: விழாக்கோலம் பூண்ட கமலா ஹாரிசின் பூர்வீக கிராமம்
x
தினத்தந்தி 21 Jan 2021 2:39 AM IST (Updated: 21 Jan 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றதையொட்டி அவருடைய பூர்வீக கிராமம் விழாக்கோலம் பூண்டது. குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மன்னார்குடி,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு(2020) நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.துணை ஜனாதிபதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(55) தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பு

ஜோ பைடனும், கமலா ஹாரிசும் நேற்று அமெரிக்காவில் நடந்த விழாவில் பதவியேற்றுக்கொண்டனர். கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவருடைய பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உற்சாகத்தில் இருந்து வந்தனர்.. அவர் வெற்றி பெற்றதையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர் பதவியேற்றதை முன்னிட்டு துளசேந்திரபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டது. அந்த கிராமத்தில் உள்ள வீட்டு வாசல்களில் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வண்ண கோலங்கள் போடப்பட்டிருந்தன.

பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

அரிசி வடகத்தில் கமலா ஹாரிஸ் என்று எழுதியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வினியோகம் செய்தும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கமலா ஹாரிஸ் குடும்பத்தின் குல தெய்வமான தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கமலா ஹாரிஸ் தனது பதவி மூலம் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டனர். கமலா ஹாரிஸ் இத்தகைய உயர்ந்த பதவிக்கு வந்திருப்பது தங்கள் ஊருக்கே பெருமை அளிப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story