வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி கடலூரில் ஜவாஹிருல்லா அறிவிப்பு


வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி கடலூரில் ஜவாஹிருல்லா அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 5:59 AM IST (Updated: 21 Jan 2021 5:59 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று கடலூரில் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

கடலூர்,

மனித நேய மக்கள் கட்சியின் கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூது, பொதுச்செயலாளர் அப்துல் சமது, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப், வக்கீல் ஜைனுல் ஆபீதின், காரைக்கால் அப்துல் ரகீம், தஞ்சை பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாவட்ட, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா காலத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்த மற்றும் சிறப்பான முறையில் களப்பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக கொடி அணிவகுப்பு நடந்தது.

அதைத்தொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநில உரிமைகளை பறிக்கும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், இதற்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான ஆட்சியாக மோடி அரசு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது. நீட், புதிய கல்வி கொள்கை போன்ற சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தனிச்சின்னத்தில் போட்டி

மத்திய அரசின் ஏவலாக தமிழக அரசு உள்ளது. 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து கூட்டணி இறுதியான பிறகு தான் தெரியும். மதச்சார்பற்ற கட்சிகள் ஒருமித்து இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

Next Story