சட்டமன்ற தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சம் வாக்காளர்கள்
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விபரங்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் அம்பத்தூர் மண்டல அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர் மண்டலம் அலுவலகம், அம்பத்தூர் தாசில்தார் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 3,622 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள ஆயிரத்து 205 பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை வரப்பெற்ற 1 லட்சத்து 31 ஆயிரத்து 346 மொத்த விண்ணப்பங்களில், 1 லட்சத்து 28 ஆயிரத்து 428 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள 2,917 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
1¼ லட்சம் புதிய வாக்காளர்கள்
கடந்த நவம்பர் 16-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 78 ஆயிரத்து 501 பேர் ஆவர்.அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 429 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும், 8,101 வாக்காளர்கள் 66நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் ஆதார ஆவணங்களை நகல்களை அளித்து தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புனிதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story