ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு


ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 12:55 AM GMT (Updated: 21 Jan 2021 12:55 AM GMT)

ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈேராட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.

ஈரோடு,

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 24-ந்தேதி ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பகல் 10 மணிக்கு ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 24-ந்தேதி ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தருகிறார். இதையொட்டி அவருக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அன்று மதியம் 2 மணிக்கு அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். ராகுல்காந்தி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story