இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 11 சட்டமன்ற தொகுதிகளில் 30,04,140 வாக்காளர்கள்
சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர்.
சேலம்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 29 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 1.1.2021-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. இதற்காக 4 கட்டங்களாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராமன் வெளியிட்டார்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 165 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 8 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 6 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக நடந்த திருத்த பணிகள் மூலம் 99 ஆயிரத்து 840 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 57 ஆயிரத்து 268 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
18 வயது பூர்த்தி அடைந்த 46 ஆயிரத்து 391 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் 42 ஆயிரத்து 572 பேர் கூடுதலாக இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும், voter Helpline என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் மாறன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story