திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்; பார்வையாளர்கள் உள்பட 39 பேர் காயம்


வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து சென்ற காளை
x
வாடிவாசலில் இருந்து துள்ளிக் குதித்து சென்ற காளை
தினத்தந்தி 21 Jan 2021 1:45 AM GMT (Updated: 21 Jan 2021 1:45 AM GMT)

திருச்சி பெரியசூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். பார்வையாளர்கள் உள்ளிட்ட 39 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடப்பதைபோல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளாக தொன்று தொட்டு இந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 15-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று பெய்த தொடர் மழை காரணமாக ஜல்லிக்கட்டு 20-ந்தேதிக்கு (அதாவது நேற்றைக்கு) தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நேற்று நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, அதன் முன்புள்ள திடலில் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பார்வையாளர் மேடையும், ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசல் வழியாக அழைத்து வருவதற்கு இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மருத்துவக்குழு

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தால், அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல வசதியாக அவசரகால வழி, 108 ஆம்புலன்ஸ்கள், தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், கால்நடை மருத்துவர்கள், பாதுகாப்புக்கு போலீசார் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாடு பிடி வீரர்களுக்கு உடல் வெப்பநிலை அளவிடும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 550 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் 450 மாடுபிடி வீரர்களும் பெயர் பதிவு செய்திருந்தனர். காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அருகே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கினர். காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர் அடையாள அட்டை சரிபார்த்தல், மாடுபிடி வீரர்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களா? என சரிபார்த்து பெயர் பதிவு செய்தல் ஆகியவை வாடிவாசல் அருகே நடந்தது.

உறுதிமொழி ஏற்பு

காலை 8.45 மணிக்கு வாடிவாசல் முன்பு திருச்சி கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் நமது கலாசாரம், பண்பாட்டை பேணி காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க மாட்டோம் என்றும், அரசு விதிக்குட்பட்டு விளையாடுவோம்’ என்றும் உறுதி ஏற்றனர்.

பின்னர் ஜல்லிக்கட்டை முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான ப.குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், திருவெறும்பூர் தாசில்தார் செல்வகுமார், திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காளையா...வீரனா தொட்டுப்பார்

முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் ஸ்ரீநற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் காளை ஆகியவை சீறிப்பாய்ந்து வெளியேறின. கோவில் மாடுகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டு விட்டனர். கோவில் மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரட்டைமலை ஒண்டிகருப்பன் கோவில் மாடு துள்ளாட்டம் போட்டபடி வந்தது.

தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் 50 பேர் குழு ஒரு பேட்ஜ் என 8 பேட்ஜ்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர். காளைகள் வாடிவாசல் வழியாக வெறிப்பிடித்தாற்போல சீறிப்பாய்ந்தன. காளையா.. வீரனா.. என ஒரு போட்டியே நிகழ்த்தப்பட்டது. சில காளைகள் தன்னை ‘தொட்டுப்பார்’ பார்க்கலாம் என வீரர்களை நெருங்க விடாமல் துவம்சம் செய்ய தொடங்கின.

உடனடி பரிசுகள்

மாட்டின் பயமுறுத்தலுக்கு பயந்த காளையர்கள், உயிர் பிழைக்க வாடிவாசல் திடலின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர்.

சில காளைகள், பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்ததோடு மட்டும் அல்லாமல் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர்-டி.ஐ.ஜி. தரப்பில் விடப்பட்ட காளைகள்

ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான செவலை, கொம்பன் உள்ளிட்ட 3 காளைகள் களம் இறங்கின. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் அடக்க முயன்று அவைகளில் ஒன்றைக்கூட பிடிக்க முடியவில்லை. மாடுகளே வென்றது.

இதுபோல திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தரப்பில் 3 காளைகள் வாடிவாசல் வழியாக சீறியபடி வந்தன. அவற்றில் 2 காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வென்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற கம்பம் சந்தோஷ் என்பவரின் மாடு, வீரர்களிடம் பிடிபடாமல் வென்றது.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி விளக்கு, காமாட்சி விளக்கு சில்வர் அண்டா, குடம், ரொக்கப்பரிசு ரூ.5 ஆயிரம், ரூ.1, 000 உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள், வீரர்களை சுமந்தபடி எல்லைக்கோட்டை தாண்டி ஓடின. அப்போது காளைகளே வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளையர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளே அதிகம் ஆகும்.

39 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 550 காளைகள், 450 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தாலும் வாடிவாசல் வழியாக பதிவைவிட அதிகமாக 480 காளைகள் களமிறங்கின. அதேபோல் 386 மாடுபிடி வீரர்களுமே பங்கேற்றனர். இவர்களில் 17 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 369 பேர்தான் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள்-9, உரிமையாளர்கள்-12, பார்வையாளர்-17, அந்த பகுதியில் ஐஸ் விற்றவர்-1 என 39 பேர் காயம் அடைந்தனர்.

அதாவது மாட்டின் உரிமையாளர்கள் செங்கிப்பட்டி இளையராஜா (வயது 23), மணிகண்டம் சத்யராஜ் (42), கல்லுக்குழி நாகராஜ் (43), மாடுபிடி வீரர்கள் வேங்கூர் பிரதீப் (23), அரியமங்கலம் முகமது அப்பாஸ் (40), சூரியூர் முருகேசன் (22) மற்றும் பார்வையாளர்கள் ஆலங்குடி கருணாகரன் (19), புங்கனூர் ரமேஷ் (50), கூத்தப்பார் பரமேஷ் (30), பூதலூர் சித்திரைமேடு சிவராமன் (23) மற்றும் ஐஸ் விற்றுக்கொண்டுந்த ஒருவர் என 39 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் படுகாயம் அடைந்த 4 பேர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறந்த மாடு, வீரருக்கு பரிசு

ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணிவரை நடந்தது. போட்டி முடிவில் 14 காளைகளை அடக்கிய புதுக்கோட்டையை சேர்ந்த மாடுபிடி வீரர் சிவபாலகிருஷ்ணனுக்கு மோட்டார் சைக்கிளும், 2-வது பரிசாக திருச்சி ஜெய் என்பவருக்கு வீட்டுமனை, 3-வது பரிசாக சூரியூரை சேர்ந்த சரத்திற்கு மொபட்டும் பரிசாக வழங்கப்பட்டது.

இதுபோல சிறந்த மாடுகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மாட்டின் உரிமையாளரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 1 பவுன் சங்கிலி வழங்கப்பட்டது. அவர் சார்பில் பிரதிநிதி ஒருவர் பெற்றுக்கொண்டார். 2-வது பரிசாக நவல்பட்டு ஆர்.எஸ்.ரமேசுக்கு மொபட், 3-வது பரிசாக செங்குறிச்சியை சேர்ந்த என்ஜினீயருக்கு மொபட் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை சூரியூர் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, உதயகுமார், சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் உள்ளிட்ட கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story