தொடர் மழையால் சேதம்: முளைவிட்ட மக்காச்சோள கதிர்களுடன் விவசாயிகள் போராட்டம்


தொடர் மழையால் சேதம்: முளைவிட்ட மக்காச்சோள கதிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2021 8:03 AM IST (Updated: 21 Jan 2021 8:03 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் அறுவடைக்கு முன்பே முளைவிட்ட மக்காச்சோள கதிர்களுடன், திண்டுக்கல்லில் விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. இதனால் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் மக்காச்சோளத்தை பொறுத்தவரை பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இவை விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்மழை பெய்தது.

இதனால் விளைந்த கதிர்களுடன் நின்ற மக்காச்சோள பயிர்கள், கீழே சாய்ந்தன. மேலும் தொடர்மழையால் அறுவடைக்கு முன்பே செடிகளில் மக்காச்சோளம் முளைக்க தொடங்கின. இதன் காரணமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மழையால் சேதமடைந்துள்ளது.

எனவே, மழையால் சேதமான மக்காச்சோள பயிர்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் நேற்று திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அறுவடைக்கு முன்பே மழையால் முளைவிட்ட மக்காச்சோள கதிர்கள், அழுகிய மக்காச்சோள கதிர்களை விவசாயிகள் எடுத்து வந்தனர்.

இதையடுத்து சேதமான மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் தங்கசாமி, தயாளன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது இழப்பீடு கேட்டு கோ‌‌ஷமிட்டனர். இறுதியில் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தால் சேதமான நெற்பயிர்களுடன் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியும், அழுகியும் போனது. இதனால் விவசாயிகள் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

Next Story