திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: புதிதாக 70 ஆயிரத்து 715 பேர் சேர்ப்பு


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட போது
x
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட போது
தினத்தந்தி 21 Jan 2021 11:26 AM IST (Updated: 21 Jan 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 70 ஆயிரத்து 715 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள்
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 493 வாக்குச் சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து 63 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 88 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள், 285 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 70 ஆயிரத்து 715 பேர் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 772 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 444 பேர் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 6 ஆயிரத்து 177 பேர் விண்ணப்பித்திருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் பார்வைக்கு...
இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சரிபார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் தாசில்தார் ரவீந்திரன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story