வாணியம்பாடியில், மோசடி செய்த நகை, பணத்தை கேட்ட நிதிநிறுவன அதிபரை கொல்ல முயற்சி - 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
வாணியம்பாடியில் தனியார் நிதிநிறுவனத்தில் மோசடிசெய்த நகை, பணத்தை திருப்பி கேட்ட நிதிநிறுவன அதிபரை கொலைசெய்ய முயன்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வாணியம்பாடி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுடன் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பகுதியை சேர்ந்த சந்திரா மற்றும் செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சோனியா ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் நிதி நிறுவனத்தில் உள்ள அனைத்து பணம் மற்றும் நகைகளை கண்காணிக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் பாலசுப்பிரமணி கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ரூ.24 லட்சம் ரொக்கம் மற்றும் 46 பவுன் நகை குறைந்ததை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் சந்திரா மற்றும் சோனியா இருவரும் நகை, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. உடனே அவர்கள் நகை, பணத்தை கொடுத்து விடுவதாகக்கூறி, மன்னிப்பு கேட்டுள்ளனர்.
நகை, பணத்தை மோசடி செய்ததால் சந்திரா மற்றும் சோனியா ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பின்னர் தொடர்ந்து நகை, பணத்தை கேட்டு பாலசுப்பிரமணி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சந்திரா, அவரது உறவினர்களான விஷ்ணு, பிரகாஷ் மற்றும் அங்கப்பன் ஆகியோருடன் சேர்ந்து நிதிநிறுவன அதிபர் பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி அவரை கொலை செய்வதற்காக பாலசுப்பிரமணி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கதவை தட்டி கூப்பிட்டு வெளியே வந்தவுடன் பாலசுப்பிரமணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்தனர். அப்போது, பாலசுப்பிரமணியின் மனைவி ரஜினி வெளியே வந்துள்ளார்.
அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஜினி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றார். பின்னர் இதுகுறித்து ரஜினி கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில். மோசடி செய்த நகை, பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் பாலசுப்பிரமணியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதும், இதில் 5 பேர் ஈடுபட்டதும் அம்பலமானது.
அதைத்தொடர்ந்து சந்திரா மற்றும் சோனியா, அங்கப்பன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story