மதுரை கோட்டத்தில் முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட பாசஞ்சர் ரெயில்கள் விரைவில் இயக்கம் - உடனடி டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை கோட்டத்தில், முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உடனடி டிக்கெட் எடுத்தும் பயணிக்கலாம்.
மதுரை,
கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைக்காக பார்சல் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. மேலும், வடமாநிலத்தவருக்கான ஷரமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 60 சதவீத ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் ஓடத்தொடங்கின.
ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைப்பதற்கு பதிலாக கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் வகையில் தென்னக ரெயில்வே ரெயில்களை இயக்கியது. இதற்கு தமிழக மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக அரசு ஒத்துழைக்காததால் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரெயில்களை இயக்க முடியவில்லை என்று ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதும், சென்னையில் பாசஞ்சர் ரெயில்களை இயக்க அந்தந்த பகுதி கலெக்டர்களிடம் ரெயில்வே துறை அனுமதி கோரியுள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக மட்டுமாவது பாசஞ்சர் ரெயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த நிலையில, தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மதுரை கோட்டத்தில் பாசஞ்சர் ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளர் லெனின் தரப்பில் ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ரெயில்வே வாரியம் செவிசாய்க்கவில்லை.
மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் தரப்பில் இருந்து தொடர்ந்து பாசஞ்சர் ரெயில்களை இயக்க அனுமதிக்்கும் படி ரெயில்வே வாரியத்துக்கு அழுத்தம் தரப்பட்டது. எம்.பி.க் கள் மற்றும் பயணிகள் நலச்சங்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. அதனை தொடர்ந்து, 10 பாசஞ்சர் ரெயில்களை மட்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட பாசஞ்சர் ரெயில்கள் விரைவில் இயக்கப்படும் என தெரிகிறது. அதாவது, மதுரை-செங்கோட்டை, மதுரை-பழனி, மதுரை-விழுப்புரம், மதுரை-ராமேசுவரம், நெல்லை-செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஒரேயொரு ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட உள்ளன.
இந்த ரெயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களுக்கு வந்து வழக்கம்போல உடனடி டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். அத்துடன், யூ.டி.எஸ். என்று சொல்லப்படும் செல்போன் செயலி மூலமும் டிக்கெட் எடுத்து ரெயில்களில் பயணிக்கலாம். அரசின் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக
டிக்கெட் இல்லாமல் பிளாட்பாரத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன், ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே பயணிகள் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கிருமிநாசினி திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்யலாம். தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் மட்டுமே முதன்முறையாக பொதுப்பெட்டிகளை கொண்ட பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story