மாவட்டத்தில் 4 தொகுதிகளில் இறுதி பட்டியலின்படி 11,57,540 வாக்காளர்கள் - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்


மாவட்டத்தில் 4 தொகுதிகளில் இறுதி பட்டியலின்படி 11,57,540 வாக்காளர்கள் - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2021 8:07 PM IST (Updated: 21 Jan 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட இறுதி பட்டியலின்படி 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அதன்பின்பு மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- ​இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி இந்த மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்வதற்கு 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி மாவட்டத்தில் 5, 68, 014 ஆண் வாக்காளர்களும், 5, 70, 306 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11, 38, 383 வாக்காளர்கள் இருந்தனர்.

இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் உள்ள 1369 பாகத்தில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 343 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 132 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக 16.11.2020 முதல் 15.12.2020 வரை பெதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 14, 049 ஆண் வாக்காளர்கள், 15, 716 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 29, 771 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,720 ஆண் வாக்காளர்கள், 4, 890 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 10, 614 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர்.

இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களான ராமநாதபுரம் சப்-கலெக்டர் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.tn.gov.in மற்றும் www.nvsp.in-ல்​பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இந்தநிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, தேர்தல் அலுவலர்கள் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல், திருவாடானை மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர், முதுகுளத் தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணிமாறன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story