நெல்லை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


நெல்லை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 6:59 PM GMT (Updated: 21 Jan 2021 6:59 PM GMT)

நெல்லை ஐகிரவுண்டில் அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்பு தொடங்கியது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட்டது.

அறிமுக கூட்டம்

நேற்று காலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்டது. காலையில் கல்லூரி கூட்ட அரங்கில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதற்கு வந்த முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை மூத்த மாணவ-மாணவிகள் பூங்கொத்துகள், பூக்கள் கொடுத்து வரவேற்றனர். அப்போது பெரும்பாலான மாணவ-மாணவிகள் நீலநிற சீருடை அணிந்து வந்திருந்தனர்.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் வரவேற்றார். துணை முதல்வர் சாந்தாராம் முன்னிலை வகித்தார். டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் அவரது தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அப்போது டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

பழம்பெரும் கல்லூரி

தமிழகத்தில் உள்ள பழம்பெரும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி விளங்குகிறது. இந்த கல்லூரியில், கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட்டது. இங்கு பெரிய ஆஸ்பத்திரி, மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ஆகியவையும், மருத்துவ உயர் கல்வி, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மிகச்சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் நல்லமுறையில் படித்து மருத்துவ சேவையில் சாதனைகள் படைக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

கல்லீரல்-இருதயம்

இந்த அரசு ஆஸ்பத்திரியில் தற்போது கல்லீரல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கிடைத்து உள்ளது. தென் மாவட்ட அளவில் தற்போது இங்கு நாள்தோறும் 5 ஆயிரம் புறநோயாளிகளும், 2 ஆயிரத்து 500 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்டு, ஜெயந்தி ஞானதீபம் உள்ளிட்ட பல்வேறு துறை பேராசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது கொரோனா தடுப்பு குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர் அருண்குமார் நன்றி கூறினார்.

Next Story