தாமிரபரணி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட குறுக்குத்துறை முருகன் கோவிலில் தூய்மை பணி


தாமிரபரணி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட குறுக்குத்துறை முருகன் கோவிலில் தூய்மை பணி
x
தினத்தந்தி 21 Jan 2021 7:25 PM GMT (Updated: 21 Jan 2021 7:25 PM GMT)

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட குறுக்குத்துறை முருகன் கோவிலில் தூய்மை பணி நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதனால் நெல்லை குறுக்குத்துறையில் உள்ள முருகன் கோவிலை வெள்ளம் மூழ்கடித்தவாறு சென்றது. கோவிலின் மேல் கோபுரத்தின் பாதி பகுதி மூழ்கியவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தற்போது மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால், இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து இயல்பை விட சற்று கூடுதலாக தண்ணீர் ஓடுகிறது.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறுக்குத்துறை முருகன் கோவில் சேதம் அடைந்தது. கோவிலின் மேல் பதிக்கப்பட்டிருந்த தள ஓடுகள் மற்றும் சுண்ணாம்பு காரைகள் பெயர்ந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

மேலும் கோவிலின் உள்ளே இருந்த சப்பரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. கோவில் உள்ளே மணல், சகதியுமாக காட்சி அளித்தது.

தூய்மை பணி

இதைெயாட்டி கோவிலுக்கு செல்லும் கல் பாலத்தில் குவிந்திருந்த செடிகள், குப்பைகளை அந்த ஊர் இளைஞர்கள் சுத்தம் செய்தனர். மேலும், கோவில் முன் மண்டப வளாகத்தை அந்த பகுதி இளைஞர்கள் நேற்று சுத்தம் செய்தனர். ஆற்றில் இருந்து வாளிகளில் தண்ணீரை எடுத்து வந்து கோவிலை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி இளைஞர்கள் கூறுகையில், "குறுக்குத்துறை முருகன் கோவிலை தைப்பூசத்துக்குள் முழுமையாக சுத்தம் செய்து, தைப்பூச விழாவை நடத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக மின்சார வசதி தேவை. கோவிலுக்கு செல்லும் மின்கம்பங்கள் மழை வெள்ளத்தில் சாய்ந்து கிடக்கின்றன. எனவே புதிய மின்கம்பங்களை உடனடியாக நடவு செய்து கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கோவிலின் உள்பகுதியை முழுமையாக சுத்தம் செய்ய முடியும்.

மின்கம்பங்கள்

இதுதவிர கோவிலுக்கு செல்லும் கல் பாலத்தில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு தெரு விளக்குகள் பொருத்தினால்தான் அதிகாலை நேரம் மற்றும் மாலை நேரத்தில் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கு வசதியாக இருக்கும்.

வெள்ளம் வடிந்து பல நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் சாய்ந்த மின் கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும்’’ என்றனர். இதே கோரிக்கையை அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story