கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2021 9:12 PM GMT (Updated: 21 Jan 2021 9:12 PM GMT)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25-வது கிளை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். வங்கியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றினார்.

தொடர்ந்து கோவில்பட்டி- புதுரோட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி பிரதான கிளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

பெட்ரோல் பங்க்

பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நெல்லை மண்டலம் சார்பில், கோவில்பட்டி-எட்டயபுரம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் 345 பயனாளிகளுக்கு ரூ.2.35 கோடி கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ரூ.60 ஆயிரம் கோடி

தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கிகளை லாபத்தில் இயங்க வைத்து தற்போது வருமான வரி செலுத்தும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் அமைச்சராக பொறுப்பேற்றபோது, 27 ஆயிரம் ரேஷன் கடைகள்தான் இருந்தது. தற்போது அதனை 33 ஆயிரத்து 30 ரேஷன் கடைகளாக உயர்த்தி உள்ளோம். அதேபோன்று கூட்டுறவு வங்கியின் இருப்புத்தொகை ரூ.26 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.59 ஆயிரத்து 507 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் பொதுமக்கள் எளிதில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக, 50 முதல் 60 ரேஷன் கார்டுகள் உள்ள பகுதிகளில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி உள்ளோம். தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளிலும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். 4,500 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.60 ஆயிரம் கோடி வழங்கி உள்ளோம். சாதனை படைத்து வரும் கூட்டுறவு துறைக்கு 21 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கந்துவட்டி இல்லை

முன்பு தி.மு.க. ஆட்சியில் கந்துவட்டி கொடுமையால் மக்கள் பரிதவித்தனர். அவர்களை மீட்பதற்காக ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்து அதனை 12 சதவீத வட்டியில் 350 நாட்களில் திருப்பி செலுத்த வழிவகை செய்தோம். இதன்மூலம் 16 லட்சத்து 51 ஆயிரத்து 891 சாலையோர வணிகர்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மைக்ரோ ஏ.டி.எம். மையம்

தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் 2 லட்சத்து 5 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தொடக்க கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மைக்ரோ ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடனை ஸ்மார்ட் கார்டு மூலமாக இந்தியாவில் உள்ள எந்தவொரு இடத்திலும் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம்.

ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து, அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிச்சாமி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கணேஷ் பாண்டியன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ச.லீ.சிவகாமி, துணை பொதுமேலாளர் காந்திமதிநாதன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story