மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 2:55 AM IST (Updated: 22 Jan 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் 5 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தப்பாளாம்புலியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவூர்-புலிவலம்

மாவூரில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜாங்கம் தலைமையிலும், புதூரில் ஒன்றிய துணை செயலாளர் பக்கிரிசாமி தலைமையிலும், புலிவலத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் சோமு தலைமையிலும், மாங்குடியில் கிளை செயலாளர் வீராச்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலு, நிர்வாகி கோசிமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நகர தலைவர் மருதாசலம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், கட்சியின் நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளர் சிவசாகர், நகர தலைவர் மதன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வு காண வேண்டும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நீடாமங்கலம்

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 2 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீடாமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேவங்குடியில் நிர்வாகி ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெருமாள், சங்க மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story