ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும்


ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும்
x
தினத்தந்தி 22 Jan 2021 2:58 AM IST (Updated: 22 Jan 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும் என்று மக்கள் கிராமசபை கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இனாம்கிளியூர், ஆலங்குடி ஆகிய இடங்களில் தி.மு.க சார்பில் நேற்று நடந்த மக்கள் கிராமசபை கூட்டங்களில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா சாவில் மர்மம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி பேசுவது நாகரிகமற்ற செயல். இறந்தவரை பற்றி பேசுவது சரியானது அல்ல. எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சமாதியில் தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சாவில் மர்மம் இருக்கிறது என்று சொன்னவர்கள் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா?.

அதானி-அம்பானி

தி.மு.க ஆட்சியில் ரூ.215-க்கு விற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் இன்று ரூ.770-க்கு விற்கப்படுகிறது. மானியமும் கிடையாது. செருப்பு முதல் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், ஏன் முக கவசம் கூட வரி செலுத்தி பொதுமக்களால் வாங்கப்படுகிறது. மோடியின் உண்மையான விசுவாசிகள் அதானி, அம்பானி ஆகியோர்தான். கார்ப்பரேட்டுகளின் விசுவாசியான பிரதமர் ேமாடி, மூன்று வேளாண் சட்டங்களை நாட்டில் திணித்து இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளையும் போராட தூண்டியுள்ளார்.

இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என இரண்டு மாதமாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அதற்கு செவி சாய்க்காத பிரதமருக்கு ஆதரவாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழக மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை.

ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி

வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவது உறுதி. தலைவர் கருணாநிதியை போல உறுதியான, துணிச்சலான அதே ஆற்றலுடன் முடிவை எடுக்கும் முதல்-அமைச்சராக ஸ்டாலின் வருவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரெயில் போக்குவரத்து

ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் பேசும்போது, பல்வேறு தரப்பு வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை ெரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைப்பட்ட குக்கிராமங்களுக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த தயாநிதிமாறன், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். பொதுமக்கள் நலன் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணா சிலைக்கு மாலை

கூட்டத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஒன்றிய அவைத்தலைவர் கேசவன், துணைச் செயலாளர்கள் கோபால், ஞானசேகரன், அமுதா தமிழரசன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பிரிதிவிராஜன், விஜயபாஸ்கரன், செல்வகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கலாவதி குணசேகரன், ஆலங்குடி கிளை செயலாளர்கள் நேரு, சண்முகம், கருணாநிதி, பஞ்சு. ரவிச்சந்திரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வலங்கைமான் கடைவீதியில் உள்ள அண்ணாசிலைக்கு தயாநிதி்மாறன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குடவாசல்

குடவாசல் பகுதியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி கலந்து கொண்டு பேசியதாவது:-

மக்கள் வரிப்பணத்தில் பொங்கல் பரிசு என்ற போர்வையில் ஓட்டுக்காக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்தால் அது முடியாது. அ.தி.மு.க.வை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும். அப்போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்ட முடிவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story