ஊழியர்கள் போராட்டத்தால் அரசு பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை
ஊழியர்கள் போராட்டம் காரணமாக புதுவையில் அரசு பஸ்கள் 2-வது நாளாக ஓடவில்லை.
புதுச்சேரி,
புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் நிரந்தர ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. பணிமனை வாசலில் அமர்ந்து நேற்று முன்தினம் முதல் அவர்கள் போராடி வருகின்றனர்.
இதனால் அங்கிருந்து வெளியே எடுத்து வரமுடியாததால் பஸ்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. நேற்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அதிக அளவில் தனியார் பஸ்களே இயக்கப்படுவதால் இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே சாலை போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்காலிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடற்கரை சாலையில் உள்ள பணிமனை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஸ்களை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு பணிமனையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story