கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் 110 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விடுப்பு எடுத்து கம்பன் கலையரங்கம் அருகே நேற்று காலை ஒன்று கூடினர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு சங்க தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார்.
ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி வழியாக மிஷன்வீதி சந்திப்பை அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு புதுவைக்கு வழங்கியுள்ள கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சரக்கு மற்றும் சேவை வரியின் நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story