சேந்தமங்கலம் அருகே பொதுமக்களை கடித்து குதறிய வாலிபரால் பரபரப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2021 4:47 AM IST (Updated: 22 Jan 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கண்ணன் (வயது 20). பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த இவர் சமீபகாலமாக கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவர் அப்பகுதியை சேர்ந்த நபர்களை கஞ்சா கேட்டு தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று காலையில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த பல் டாக்டர் உள்பட சிலரை கண்ணன் கடித்து குதறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கண்ணனை பிடித்து கை, கால்களை கட்டி சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

உடல் முழுவதும் ரத்தத்துடன் காணப்பட்ட அவருக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
 
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நாமக்கல்லுக்கு கஞ்சா வாங்க வந்தபோது தன்னிடம் இருந்த பணத்தை மர்ம நபர்கள் பிடுங்கி சென்று விட்டதாக கூறினார். இச்சம்பவம் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story