ஆரணி ஆற்று தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
ஆரணி ஆற்று தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக அன்று முதல் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு கனரக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் கிழக்கு திசையில் தற்காலிக செம்மண் சாலை அமைத்து அதன் வழியாக பொதுமக்கள், கார்கள் ஆட்டோக்கள் செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
கடைகள் வெறிச்சோடியது
திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளில் இருந்து கனரக போக்குவரத்து நடைபெற்றால்தான் ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளிலும் வியாபாரம் நடக்கும். தற்போது கனரக போக்குவரத்து மாற்று மார்க்கத்தில் நடைபெற்று வருவதால் வியாபாரம் இன்றி வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்கள் வியாபாரம் இல்லாமல் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் கனரக போக்குவரத்து இல்லாமல் கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 56 நாட்களாகியும் அதை சீரமைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தாலுகா அலுவலகம் முற்றுகை
இதனை கண்டித்தும் உடனடியாக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றும், தரைப்பாலம் அருகே ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்கோட்டை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெள்ளியன்று கடையடைப்பு நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதிகாரிகள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 25-ந்தேதிக்குள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story