43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை


43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
x
தினத்தந்தி 22 Jan 2021 6:20 AM IST (Updated: 22 Jan 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை நகா்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசு கல்லூரிக்கு இணையான கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் தனியார் மருத்துவக்கல்லூரிகளை விட 30 சதவீதம் கூடுதலாக கல்வி கட்டணத்தை வசூலித்து வருவதாகவும், ஆகவே இதில் அரசு தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று43-வது நாளாக நீடித்தது.

காலவரையற்ற விடுமுறை

இந்த நிலையில் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ-மாணவிகள் தாமரை விடுதியின் முன்பு மாலை 4 மணி அளவில் ஒன்று திரண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. இதற்கிடையில் மீண்டும் விடுதியில் தங்கிக்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் விடுதிக்கு சென்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

கலெக்டருடன் சந்திப்பு

இதற்கிடையில் போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச வந்தனர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், அரசு மருத்துவக்கல்லூரிக்கு இணையாக கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதை கேட்ட கலெக்டர், இது பற்றி அரசிடமும், நிர்வாகத்திடமும் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றனா்.

தீர்வு காண வேண்டும்

பின்னர் மாணவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். எங்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக தற்போது காலவரையின்றி கல்லூரி மூடப்படுவதாக நிா்வாகம் அறிவித்துள்ளது என்றனர்.

Next Story