தக்கலை அருகே பரபரப்பு காருக்குள் காண்டிராக்டர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


தக்கலை அருகே பரபரப்பு காருக்குள் காண்டிராக்டர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jan 2021 6:34 AM IST (Updated: 22 Jan 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே சாலையோரம் நின்ற காருக்குள் காண்டிராக்டர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் பி.பி. கால்வாய் சாலை வழியாக நேற்று காலை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் ஒரு சொகுசு கார் அனாதையாக நின்றது.

தொழிலாளர்கள் காருக்குள் பார்த்த போது டிரைவர் இருக்கையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

காரை சோதனை செய்தபோது விஷ பாட்டில், மது பாட்டில்கள், சாப்பிட்ட மீதி பிரியாணி, செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் அடையாள அட்டை போன்றவை இருந்தன. அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்தவர் குலசேகரம் மடத்துக்கோணம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கட்டிட காண்டிராக்டர்

உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் சுபாஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவர், தக்கலை மருந்துக்கோட்டை பகுதியில் காருக்குள் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இது குறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்த சுபாசுக்கு வனஜா என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். காருக்குள் காண்டிராக்டர் பிணமாக கிடந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story