கோவை - கேரள எல்லையில், ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கேரள வழிப்பறி கும்பல்; தனிப்படை விசாரணை
கோவை-கேரள எல்லையில் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கேரள வழிப்பறி கும்பல் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் கடத்தலில் திடுக்கிடும் தகவல்கள்
கோவையை அடுத்த மதுக்கரை மரப்பாலம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் மன்னார்க்காடு நோக்கி சென்ற ஒரு காரை இரவு 9 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் மற்றொரு காரில் வழிமறித்து அந்த காரை கடத்தி சென்றது. அந்த காரில் இருந்த கேரள மாநிலம் பாலக்காடு நாட்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் முகமது முஸ்தபா (வயது 34), நண்பர் காஜா உசேன் ஆகியோரை தாக்கி காரை அந்த கும்பல் கடத்தி சென்றது. அதன்பின்னர் அந்த கார் கன்னியாகுமரி மாவட்டம் நித்ரவிளை என்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.இந்த துணிகர சம்பவம் கடந்த 11-ந் தேதி நடந்திருந்தாலும் இதுபற்றி கார் டிரைவர் கடந்த 19-ந் தேதி தான் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் துப்புத்துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொள்ளை கும்பல்
கோவை-கேரள எல்லையில் ஹவாலா பணத்துடன் வரும் கார்களை குறி வைத்து கேரளாவை சேர்ந்த வழிப்பறி கும்பல் செயல்பட்டு வருகிறது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் ஆலப்புழா, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் கடந்த 11-ந் தேதி கேரளாவில் இருந்து ஒரு சொகுசு காரில் கோவை வந்தனர். பின்னர் முகமது முஸ்தபா காரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து காரை கடத்தி சென்றனர். அந்த காரில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயையும் அந்த கும்பல் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவையை அடுத்த நவக்கரையில் ஒரு காரை வழிமறித்து அதில் இருந்த ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. மறுநாள் அந்த கார் அனாதையாக நின்றது. அதை சோதனை செய்த போது அதில் 4 ரகசிய அறைகள் இருந்ததும் அதில் ரூ. 60 லட்சம் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதே பாணியில் முகமது முஸ்தபா காரும் கடத்தப்பட்டு உள்ளதால் இது ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் வழிப்பறி கும்பலின் கைவரிசையாக தான் இருக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-
கடந்த 11-ந் தேதி காரை கடத்தி சென்ற கும்பல் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதற்காக கோவை புறநகரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த 200 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இதில் கொள்ளையர்களை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. எனவே கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.
அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
கடந்த டிசம்பர் மாதம் கேரளா நோக்கி சென்ற காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.60 லட்சம் ஹவாலா பணம் குறித்து விசாரிக்குமாறு ஏற்கனவே வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன்பேரில் அவர்கள் நியமித்த ஒரு அதிகாரியிடம், ஹாவாலா பணம் பறிமுதல் செய்தது தொடர்பான வழக்கை விரைவில் ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story